புதுச்சேரி : புதுச்சேரியில் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளியான கருணாஸ் குற்றவாளி என புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றம் வரும் (மே 5, 2026) கருணாஸுக்கு தண்டனை விவரத்தை அறிவிக்க உள்ளது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான முதியவர் விவேகானந்தன் ஏற்கெனவே சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் 2024 மார்ச் மாதம் முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது. 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக 500 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.புதுச்சேரி போக்ஸோ (பாலியல் குற்றங்களுக்கு எதிரான சிறப்பு சட்டம்) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் இன்று கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மற்றொரு குற்றவாளியான விவேகானந்தன், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வரும் (மே 5) கருணாஸுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தக் கொடூர சம்பவம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நீதிக்காக தொடர்ந்து போராடி வந்த நிலையில், இன்று நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
