கோவை : மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசார் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த விதம் குறித்தும் அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி ரம்யா பாரதி, “கடந்த 21ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனதாக இரவு சுமார் 8.30 மணியளவில் அவசர உதவி எண் 100 மூலம் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அதே இரவு 10 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். “CCTV காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்ததில், நாகப்பட்டினத்தை சேர்ந்த 33 வயதான கார்த்தி என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது. அவர் சிறுமியின் குடும்பத்துக்கு பழக்கமான அண்டை வீட்டில் வசித்து வந்தவர்” என்று ஐஜி தெரிவித்தார்.
இதையடுத்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த கார்த்தியை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற அவர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து குதித்ததால், வலது கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட கார்த்தியிடம் நடத்திய விசாரணையில், “சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அதன் பிறகு கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோட்டத்தில் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்” என்று ரம்யா பாரதி தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் மோகன் ராஜ் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், “மோகன் ராஜ் கார்த்தியின் நெருங்கிய நண்பர். இந்த குற்றம் நடப்பதற்கு முன்பும், பிறகும் கார்த்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். குற்றம் குறித்து தெரிந்தும் காவல்துறையிடம் மறைத்துள்ளார். இதனால் அவர் மீது criminal conspiracy பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் விளக்கம் அளித்தார்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “பிரேத பரிசோதனை இன்று தான் நடத்தப்பட்டுள்ளது. அதற்கான முழு அறிக்கை வந்த பிறகே உறுதியாக கூற முடியும். மருத்துவரின் அறிக்கையின் அடிப்படையில்தான் போக்சோ சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து பேசும்போது, “முதல் தகவல் கிடைத்த உடனேயே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்ற நோக்கில் இரவு முழுவதும் சுமார் 200 முதல் 250 CCTV கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஐந்து தனிப்படைகளும் தொடர்ந்து வேலை செய்ததால் முக்கியமான ஆதாரங்கள் விரைவாக கிடைத்தன” என்றார்.
மேலும், “24 மணி நேரத்திற்குள் வழக்கின் preliminary investigation கிட்டத்தட்ட முழுமையாக முடிக்கப்பட்டது. குற்றவாளிகள் ஊரை விட்டு தப்பிச் செல்லும் முன்பே கைது செய்யப்பட்டனர். CCTV காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் மிகச்சரியான விசாரணை நடத்தப்பட்டது” என்றும் கூறினார்.
இதேவேளை, போக்சோ வழக்கு என்பதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை எந்த சூழலிலும் வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் ஐஜி ரம்யா பாரதி வேண்டுகோள் விடுத்தார். “இது ஒரு POCSO வழக்கு. அதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் வெளியில் வரக்கூடாது. தவறுதலாக வெளியிட்டிருந்தாலும் உடனடியாக அதை நீக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
