டிட்வா புயலால் 4 உயிரிழப்பு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

நீரில் மூழ்கி சேதமடைந்த விலை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

KKSSR Ramachandran

சென்னை :வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த டிட்வா புயலால் தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்ததாலும், மற்ற 2 பேர் மின்சாரம் தாக்கியதாலும் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், 582 கால்நடைகள் இறந்துள்ளன, 1,601 வீடுகள் (குடிசை, ஓட்டு வீடுகள் உட்பட) பகுதியளவு அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார்.

புயல் மற்றும் கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள சென்னையில் தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) 11 குழுக்கள் (330 பேர்), தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப்படை (SDRF) 3 குழுக்கள் (52 பேர்) தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மின்தடை, சாலை மறியல், மரங்கள் வேரோடு சாய்ந்தது போன்ற பிரச்சினைகளை சரி செய்ய துறை ரீதியான குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.

கனமழையால் மாநிலம் முழுவதும் தற்போதைய கணக்கீட்டின்படி 85,521.76 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நெல், கரும்பு, வாழை, பயறு வகை பயிர்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். இந்த நிவாரணம் விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல தடை நீடிப்பதாகவும், மழை முழுமையாக விலகும் வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பாதிப்பு விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதால், இழப்பு அளவு இன்னும் சற்று உயர வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.