10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

Hero Image

சென்னை : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது முடிவுகளை இணையதளங்கள் மூலம் அறிந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்மொழி மற்றும் பிற மொழிப்பாடத் தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஆங்கிலத் தேர்வு மார்ச் 16ஆம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து கணிதத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி, அறிவியல் தேர்வு மார்ச் 30ஆம் தேதி, சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்றது. இறுதியாக விருப்ப மொழிப்பாடத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்த பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8.82 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். அதேபோல், தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகள் உள்ளிட்டோரையும் சேர்த்து மொத்தம் 9,09,002 பேர் தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 4,219 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வுகளை சீராக நடத்த தினமும் சுமார் 47,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4,950க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார். தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் மற்றும் இணைய மையங்களில் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகின்றனர்.