இந்திய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
கடந்த 2 வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. முந்தைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. ஆனால், வாரத்தின் 3வது நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் சரிவில் வர்த்தகமாகி வந்தது.
அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 65,493 புள்ளிகளாக தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 33.01 புள்ளிகள் சரிந்து 65,446 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 9.50 புள்ளிகள் உயர்ந்து 19,398 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,479 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,389 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 65 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், தற்பொழுது சரிவை சந்தித்துள்ளது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் மாருதி சுசுகி இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. எச்டிஎஃப்சி வங்கி, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ லிமிடெட், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
