டெல்லி : ஒரு நாட்டின் பிரதமராக இருப்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் கொண்ட, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்திய திருநாட்டின் பிரதமர் என்றால், பொறுப்புகளும் வேலைப்பழுவும் எந்த அளவுக்கு இருக்கும் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தொடர் கூட்டங்கள், அரசு கோப்புகள், உலக நாடுகளுக்கான பயணங்கள் என ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மணி நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று அவர் தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த 76 வயதிலும், ஒரு இளைஞருக்குரிய சுறுசுறுப்புடன் அவர் வலம் வருவதன் ரகசியம் என்ன? அவரது அன்றாட ‘லைஃப்ஸ்டைல்’ மற்றும் ஃபிட்னஸ் பழக்கவழக்கங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
விடியற்காலை 4 மணி மேஜிக்
பிரதமர் மோடியின் நாள் மிகவும் அதிகாலையிலேயே தொடங்கிவிடுகிறது. தினசரி 3.5 முதல் 4 மணி நேரமே உறங்கும் பழக்கம் கொண்டவர் அவர். அதிகாலை 4 மணிக்கெல்லாம் படுக்கையை விட்டு எழுந்து, அன்றைய நாளுக்கான உத்வேகத்தைத் தேடத் தொடங்கிவிடுகிறார். இத்தனை குறைவான நேரமே தூங்கினாலும், நாள் முழுவதும் அவர் சோர்வின்றி இருக்கக் காரணம், அவர் பின்பற்றும் கடுமையான ஒழுக்கமும் மனக்கட்டுப்பாடும் தான் என கூறப்படுகிறது.
40 நிமிட யோகா மற்றும் தியானம்
அதிகாலை எழுந்தவுடன் மோடி செய்யும் முதல் வேலை யோகாசனமும், பிராணாயாமமும் தான். தினசரி 40 நிமிடங்கள் தவறாமல் யோகாசனம் செய்கிறார்.
ஆசனங்கள்: வஜ்ராசனம், சேதுபந்தாசனம், புஜங்காசன் போன்ற உடலை வலுவாக்கும் ஆசனங்களைச் செய்கிறார்.
யோக நித்ரா: வாரத்தில் இரண்டு முறை 'யோக நித்ரா' (Yoga Nidra) என்னும் ஆழ்ந்த தியான நிலையைப் பயிற்சி செய்கிறார். இது தூக்கமின்மைப் பிரச்னையைத் தடுத்து, உடலுக்குக் குறுகிய நேரத்தில் அதிக புத்துணர்ச்சியைத் தரும் என்று அவரே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
பச்சை புல் நடைப்பயிற்சி: உடற்பயிற்சிக்குப் பிறகு அதிகாலையில் பனி படர்ந்த பச்சை புற்களின் மீது வெறும் காலால் நடப்பதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். இது மன அழுத்தத்தைக் குறைத்து உடலை 'கிரவுண்டிங்' (Grounding) செய்ய உதவுகிறது.
உணவு முறை
பிரதமர் மோடி ஒரு தீவிரமான சைவ உணவுப் பிரியர். அவரது உணவுகள் எப்போதும் எளிமையாகவும், குறைந்த காரம் மற்றும் எண்ணெய் கொண்டதாகவும் இருக்கும்.
காலை உணவு: பொதுவாக காலை 9 மணியளவில் எளிய பாரம்பரிய உணவுகளான போஹா (அவல் உப்மா), கிச்சடி அல்லது வெதுவெதுப்பான இஞ்சி டீயுடன் தனது காலை உணவை எடுத்துக் கொள்கிறார்.
முருங்கைக்கீரை பராட்டா (Drumstick Paratha): ஃபிட் இந்தியா நிகழ்ச்சியில் மோடி ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். வாரத்திற்கு இரண்டு முறையாவது சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையால் செய்யப்பட்ட பராட்டாவை அவர் விரும்பி சாப்பிடுவாராம்.
மதிய மற்றும் இரவு உணவு: பருப்பு வகைகள், சிறுதானியங்கள் (Millets) மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கும் புதிய காய்கறிகள், பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார்.
6 மணி அவுட்! அவரது உணவுக் கட்டுப்பாட்டில் மிக முக்கியமான விதி: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு (மாலை 6 மணிக்கு மேல்) அவர் எதையும் சாப்பிடுவதில்லை. இது செரிமான மண்டலத்திற்குப் போதிய ஓய்வைத் தந்து, உடலை நச்சுக்களின்றி ஆரோக்கியமாக வைக்கிறது.
ஆயுர்வேதமும் ஆழ்ந்த சுவாசமும்
நம்மில் பலரும் உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சுவாசத்திற்குக் கொடுப்பதில்லை என்று மோடி வருத்தப்படுகிறார். பகல் நேரத்தில் வேலைகளுக்கு நடுவே எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கண்களை மூடி சில நொடிகள் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதை (Deep Breathing) வழக்கமாகக் கொண்டுள்ளார். இது மூளைக்கு உடனடி ஆக்சிஜனை வழங்கி, பதற்றத்தைக் குறைக்கிறது. மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மூலிகை தேநீர் மற்றும் கஷாயங்களை அவர் அருந்துகிறார்.
எனவே, ஜிம்முக்குச் சென்று கடினமான எடைகளைத் தூக்கினால்தான் ஃபிட்னஸ் என்று இல்லை, தினசரி 15 நிமிட யோகா, எளிய வீட்டு உணவு, முறையான நேர மேலாண்மை இருந்தாலே எவரும் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை மோடியின் வாழ்க்கை முறை நமக்கு உணர்த்துகிறது.
