ஹைதராபாத் :இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), 75,000 கிலோ (75 டன்) எடையுள்ள செயற்கைக்கோளை குறைந்த புவி வட்டப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்துவதற்காக 40 மாடி உயரமுள்ள பிரமாண்டமான ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அறிவித்தார். இந்த அறிவிப்பு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் 84-வது பட்டமளிப்பு விழாவில் அறிவித்தார்.
இந்த விழாவில், தெலங்கானா ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மாவால் நாராயணனுக்கு கௌரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் (Doctorate of Science) பட்டம் வழங்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் இஸ்ரோவின் சாதனைகளைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார்.நாராயணன் தனது உரையில் இஸ்ரோவின் பயணத்தைப் பற்றி விவரித்தார். “1960-களில் இந்தியாவின் முதல் ராக்கெட், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தலைமையில் உருவாக்கப்பட்டது.
அது 17 டன் எடையுடையதாகவும், 35 கிலோ எடையை குறைந்த புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திறனுடையதாகவும் இருந்தது. இன்று, இஸ்ரோ 75,000 கிலோ எடையை விண்ணில் நிலைநிறுத்தக்கூடிய, 40 மாடி உயரமுள்ள ‘N1’ என்ற சூப்பர்-ஹெவி ராக்கெட்டை உருவாக்கி வருகிறது,” என்று அவர் கூறினார். இந்த ராக்கெட், ககன்யான் மனித விண்வெளி பயணம், சந்திரயான்-4, ஷுக்ரயான் (சுக்கிரன் ஆய்வு), மற்றும் 2035-ல் தொடங்கப்படவுள்ள பாரதிய அந்தரிக்ஷ நிலையத்தின் (Bhartiya Anthariksha Station) முதல் தொகுதிகளை ஏவுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
இஸ்ரோவின் சாதனைகளைப் பற்றி பேசிய நாராயணன், “1975-ல் ஆர்யபட்டா செயற்கைக்கோளை வெளிநாட்டு உதவியுடன் ஏவியதில் இருந்து, இன்று 133 செயற்கைக்கோள்களை, 6,000 கிலோ எடையுள்ள GSAT-11 உட்பட, வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளோம். ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை முதல் முயற்சியில் ஏவிய முதல் நாடு இந்தியா. செவ்வாய் ஆர்பிட்டர் பயணத்தை முதல் முயற்சியில் வெற்றிகரமாக முடித்த ஒரே நாடும் இந்தியாவாகும்,” என்று பெருமையுடன் கூறினார்.
தற்போது 55 செயற்கைக்கோள்கள் விண்ணில் இயங்கி வருவதாகவும், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “சுபான்ஷு ஷுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 20 நாட்கள் தங்கி, 60-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக திரும்பினார். இவரது அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
