2026 தேர்தல்: அஸ்ஸாம் & கேரளா புதுச்சேரி – 3 மாநிலங்களும் ஒரே நாளில் வாக்குப்பதிவு!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநயாக கடமையாற்றினார்.

Hero Image

இன்று 2026 சட்டமன்றத் தேர்தல்களில், அஸ்ஸாம் மற்றும் கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் (ஏப்ரல் 9, 2026) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களுடன் சேர்த்து இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் முடிவுகளும் மே 4, 2026 அன்று அறிவிக்கப்படும். இந்தியாவின் இரு எல்லைகளில் அமைந்துள்ள அசாம், கேரளா இரு மாநிலங்களும் முற்றிலும் வேறுபட்ட அரசியல் சூழலைக் கொண்டுள்ளன.

அஸ்ஸாம் கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியின் கீழ் உள்ளது. கேரளாவில் தற்போது இரண்டாவது முறையாக இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சி நடைபெற்று வருகிறது.

அஸ்ஸாம்

அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் நிலையில் உள்ளது. 2016-ல் காங்கிரஸைத் தோற்கடித்து பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 126 தொகுதிகளில் 75 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனியாக 60 இடங்களில் வென்றது.2023-ல் அஸ்ஸாமில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை (Delimitation) இந்தத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மறுவரையறையால் முஸ்லிம் வாக்காளர்கள் தீர்மானகரமான பங்கு வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை சுமார் 35-லிருந்து 23 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக பாஜக இந்த முறை எந்த முஸ்லிம் வேட்பாளரையும் களம் இறக்கவில்லை.ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியும் மறுவரையறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

2001 முதல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வரும் சர்மா, 2021-ல் பெற்ற வெற்றி வித்தியாசத்தை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எல்லா கருத்துக் கணிப்புகளும் பாஜக தலைமையிலான கூட்டணி (AGP மற்றும் BPF உட்பட) இந்த முறை இன்னும் அதிக இடங்களைப் பெறும் என்று கணித்துள்ளன.


கேரளா

LDF vs UDF – இறுக்கமான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. கேரளாவில் பாரம்பரியமாக LDF மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே மாறி மாறி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால் 2021-ல் பினராயி விஜயன் தலைமையிலான LDF இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. LDF 99 இடங்களிலும், UDF 41 இடங்களிலும் வென்றது.

இந்த முறை LDF மற்றும் UDF இடையே இறுக்கமான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கருத்துக் கணிப்பின்படி, இரு கூட்டணிகளும் 60 முதல் 70 இடங்கள் வரை பெறலாம் என்றும், இரண்டுக்கும் சுமார் 39% வாக்கு பங்கு கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .பாஜக இந்த முறை 1 முதல் 5 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2025-ல் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தென் கேரளாவின் 42 தொகுதிகளில் பாஜக ஒரு காரணியாக மாறலாம்.

நெமோம் தொகுதி இதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சபரிமலை விவகாரம் இன்னும் தேர்தல் பிரச்சினையாகவே உள்ளது. அரண்முளா தொகுதியில் LDF-வின் சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், பாஜகவின் கும்மனம் ராஜசேகரன் மற்றும் காங்கிரஸின் அபின் வர்க்கி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள் பலரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இப்படியான சூழலில், தர்மடம் தொகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

மேலும், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 9, 2026) நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் காலை 9 மணி வரையிலான வாக்காளர் பங்கேற்பு விகிதம் பதிவாகியுள்ளது.இதுவரை பதிவான வாக்காளர் பங்கேற்பு:

  • அஸ்ஸாம் : 17.87%
  • கேரளா : 16.23%
  • புதுச்சேரி : 17.41%

மூன்று மாநிலங்களிலும் காலை மணிகளில் வாக்குப்பதிவு சீரான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களின் பங்கேற்பு கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.