தமிழகத்தில் சதம் அடித்த கருப்பு...சூர்யா படைத்த சாதனை!

கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் 212 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழக பாக்ஸ் ஆபிஸில் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. வெளியான ஒன்பதாவது நாளிலேயே தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த 22வது திரைப்படமாகவும், சூர்யாவின் முதல் ரூ.100 கோடி படமாகவும் ‘கருப்பு’ மாறியுள்ளது.

படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘கருப்பு’, தற்போது வசூல் வேட்டையிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது நாள் முடிவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கியிருந்த படம், அடுத்த நாள் காலை முதலே அந்த மைல்கல்லை எட்டியது.

சினிமா வட்டார தகவல்களின் படி, ‘கருப்பு’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘கருப்பு’ இடம்பிடிக்கும்.

தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் என்ற சாதனை முதன்முறையாக 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்தின் போது பேசப்பட்டது. அந்த படம் ரூ.100 கோடியை மிக நெருக்கமாக சென்றாலும், சில கோடிகளில் தவறவிட்டது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு ‘பாகுபலி 2’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.146 கோடி வசூல் செய்து அந்த மைல்கல்லை முதன்முறையாக கடந்தது.

அதே ஆண்டில் விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் ரூ.100 கோடியை கடந்த முதல் தமிழ் திரைப்படமாக மாறியது. அதன் பிறகு பல பெரிய படங்கள் இந்த பட்டியலில் இணைந்தன. தற்போது அந்த வரிசையில் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படமும் இணைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவுக்கு தமிழக பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவிலான வசூல் வெற்றி கிடைக்காத நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் அவரது கம்பேக் படமாக பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இந்த வெற்றியை மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.

இந்த பட்டியலில் நடிகர் விஜய் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ‘மெர்சல்’ திரைப்படத்திற்குப் பிறகு வெளியான அவரது அனைத்து படங்களும் தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளன. தற்போது அவர் அரசியலுக்கு சென்றிருந்தாலும், அடுத்த மாதம் வெளியாகவுள்ள அவரது கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படமும் இந்த பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் தற்போது ‘லியோ’, ‘பொன்னியின் செல்வன்’, ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ போன்ற படங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், ‘கருப்பு’ திரைப்படமும் வேகமாக அந்த பட்டியலை நோக்கி முன்னேறி வருகிறது.