சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்வாசிகா, நட்டி, சிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று (மே 14) இப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு காலை 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால், நிதிப் பிரச்சனை காரணமாக சிறப்புக் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன. காலையிலேயே தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டதால், சூர்யா ரசிகர்கள் கோபம் மற்றும் ஏமாற்றத்தில் இருந்தனர்.
நிதிப் பிரச்சனை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் சூர்யா தலையிட்டு பிரச்சனையை தீர்த்தார். இதற்கிடையே, படம் ரிலீஸ் ஆகாத சோகத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கண்ணீர் விட்டு அழுத வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பாலாஜிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அந்த வீடியோவில் “மே 14 மாலை 6 மணிக்கு படம் ரிலீஸ் ஆகும்” என நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று ரிலீஸ் ஆகாத ‘கருப்பு’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது அனுபவத்தை எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பல ரசிகர்கள் படத்தின் தரத்தைப் பாராட்டி வரும் நிலையில், சிலர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனக் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
unknown node