பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் பிரதீப் சர்க்கார் தனது 68வது வயதில் இன்று காலமானார்.
இவர், பரினீதா, லகா சுனாரி மே தாக், மர்தானி மற்றும் ஹெலிகாப்டர் ஈலா போன்ற வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமானவர். கடந்த சில நாட்களாக, இவர் உடல் நலக்குறைவால் டயாலிசிஸ் செய்து கொண்டதாகவும், இன்று அதிகாலை 3 மணியளவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், துரதிஷ்டவசமாக அதிகாலை 3.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பிரதீப் சர்க்காரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை நீது சந்திரா அவரது காலமான செய்தியை உறுதிப்படுத்தியதுடன், இந்தச் செய்தியைக் கேட்டு மனவேதனை அடைந்தேன் என்றும் மறைந்த இயக்குனர் தனது முதல் இயக்குனர் என்றும், அவருக்கும் அவரது சகோதரிக்கும் தான் மிகவும் நெருக்கமானவர் என்றும் தனது இரங்கல் செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இவரது மறைவுக்கு பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் ஹன்சல் மேத்தா ட்வீட் செய்துள்ளனர். இவர்களை தவிர, பல பாலிவுட் நடிகர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.