ஹைதராபாத் :ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான பண முறைகேடு வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இணையவழி சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பந்தயம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக ஈட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகர் ராணா ஆகியோருக்கு இந்த மாதம் 11 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறும், ஆகஸ்ட் 13 ஆம் தேதி மஞ்சு லட்சுமிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறும் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதே வழக்கில் ஏற்கனவே நடிகர் பிரகாஷ் ராஜிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது, ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தொழிலதிபர் பனிந்திர சர்மாவின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், இந்த செயலிகளின் தன்மையை அறியாமல் பெரிய தொகைக்காக விளம்பரங்களில் நடித்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மேலும், இவர் முன்பு 2022இல் ‘லைக்கர்’ படத்தின் செலவுகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
