ரஜினிகாந்த் பிறந்தநாள்...பிரதமர் முதல் கமல் வரை குவியும் வாழ்த்துக்கள்!

மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

kamal rajinikanth

சென்னை :தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1950 டிசம்பர் 12-ஆம் தேதி பெங்களூரில் சிவாஜி ராவ் கைக்வாட் என்ற பெயரில் பிறந்த ரஜினி, பேருந்து நடத்துநராக இருந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர். கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் வில்லனாக அறிமுகமான அவர், ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’, ‘பாட்ஷா’, ‘சந்திரமுகி’, ‘எந்திரன்’ போன்ற படங்களால் உலக அளவில் ரசிகர்களைப் பெற்றார்.

அவரது ஸ்டைல், டயலாக் டெலிவரி, திரை மேஜிக் தலைமுறைகளை கவர்ந்தவை.ரஜினியின் பயணம் சாதாரண மனிதனின் உழைப்பு, தன்னம்பிக்கையின் உதாரணம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பல போராட்டங்களைச் சந்தித்து சினிமாவில் நுழைந்தவர், 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மவிபூஷண் பெற்றார். தாதா சாகேப் பால்கே விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. ரசிகர்கள் அவரை ‘தலைவர்’ என்று போற்றுகின்றனர்.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்ட ரஜினி, ஹிமாலய பயணங்கள், தியானம் போன்றவற்றில் ஈடுபடுபவர்.75வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி “ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் சிறப்பான தருணம்; அவரின் நடிப்பாற்றல் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளது

ரஜினியின் ஸ்டைல், கதாபாத்திரம் முத்திரைகளை பதித்துள்ளன; திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் ரஜினிகாந்த் நீண்டகாலம், ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்” என கூறியுள்ளார்.

அதைப்போல கமல்ஹாசன் ” 75 வருடங்கள் குறிப்பிடத்தக்க வாழ்க்கை. 50 வருட புகழ்பெற்ற சினிமா.பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பரே” எனவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.