தயவுசெய்து பகிர்வதை நிறுத்துங்கள்..பிரியங்கா மோகன் வேதனை!

இணையத்தில் பரவும் AI படங்கள் வதந்தி என நடிகை பிரியங்கா மோகன் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

Priyanka Mohan sad

சென்னை :தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரியங்கா மோகன், தன்னை கவர்ச்சியான தோற்றத்தில் காட்டும் போலி AI புகைப்படங்கள் இணையத்தில் பரவுவதை எதிர்த்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரியங்கா மோகன், கடைசியாக தெலுங்கில் ‘ஓஜி’யில் பவன் கல்யாணுடன் நடித்திருந்தார். தமிழில் ‘பிரதர்’ படத்தில் ரவி மோகனுடன் நடித்ததும், தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியதும் கடைசி. அதனை தொடர்ந்து,  இப்போது கவின் உடன் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

படத்தில் பிசியாக இருக்கும் அவருடைய சில ai புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.  இதனையடுத்து, அந்த புகைப்படம் உண்மையா இல்லையா என ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ” என்னை தவறாக சித்தரிக்கும் சில AI படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதை, பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். ஆக்கப்பூர்வமான படைப்பாற்றலுக்காக AI பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. எதை உருவாக்குகிறோம், எதைப் பகிர்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருப்பது அவசியம்” எனவும் கூறியுள்ளார். பிரியங்கா மோகன், ரசிகர்களிடம் நெறிமுறை அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். போலி உள்ளடக்கங்கள் பரவுவதைத் தடுக்க, சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.