நடிகர் அஜித் தாயார் காலமானார்!

வயது மூப்பு காரணமாக நடிகர் அஜித் குமார் தாயார் மோகினி மணி (84) காலமானார்.

Hero Image

சென்னை: நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோகினி மணி கடந்த சில ஆண்டுகளாக சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். அவருக்கு எந்தவிதமான தீவிர உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றும், வயது முதிர்வு காரணமாகவே உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் அஜித்தின் தந்தை பி.எஸ். மணி என்ற பி. சுப்பிரமணியம் மற்றும் தாயார் மோகினி மணி ஆகியோர் சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்தனர். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்ட அஜித், படப்பிடிப்பு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு இடையிலும் பெற்றோரின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் ,அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மருத்துவ சிகிச்சை பெற்ற அவர், 2023ஆம் ஆண்டு தனது 85வது வயதில் காலமானார். தந்தையின் மறைவு அஜித் குடும்பத்திற்கு பெரும் இழப்பாக அமைந்த நிலையில், தற்போது தாயாரும் காலமானது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலகில் பல உயரங்களை எட்டியுள்ள அஜித்தின் வாழ்க்கைப் பயணத்தில் அவரது பெற்றோரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக எளிமை, ஒழுக்கம் மற்றும் குடும்ப பாசம் ஆகியவற்றை தனது வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்த அஜித், பல்வேறு நேர்காணல்களிலும் தனது குடும்பத்தைப் பற்றி பெருமையுடன் பேசியுள்ளார்.

மோகினி மணியின் உடல் பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நெருங்கியவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து குடும்பத்தினரின் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.