மன்னிப்பு கேட்க முடியாது...உறுதியாக நிற்கும் கமல்! ஆதரவாக இறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்!

தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

kamal haasan speech

சென்னை :தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என வெளிப்படையாகவே பேசியது  கன்னட அமைப்புகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது. கமல்ஹாசன் பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் ஆதரவும் பெருகிக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில் ” கமல்ஹாசன் அவர்கள் மிக சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற சிவராஜ்குமார் அவர்கள் மீது கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக, அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமார் அவர்களே நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

சிவராஜ்குமார் அவர்கள் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்கள் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அந்த தவறான புரிதலை தீயென வேகமாக பரப்பியும் வருகின்றனர். இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் திரு.கமல்ஹாசன், ஒருமைப்பாட்டின் குரலாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருபவர்.

அதன் வெளிப்பாடாகவே கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ மூலமாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். உண்மை இவ்வாறு இருக்க, அதற்கு மாறாக கமல்ஹாசன் அவர்கள் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி, மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து, தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஓர் மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை, சுய சிந்தனையும், பகுத்தறிவும் கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது” என அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், கமல் என்ன விளக்கம் கூறினாலும் ஏற்க மாட்டோம், கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் தான் தக் லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும் என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பது போல கமல்ஹாசனும் பேசியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” தக்லைஃப் பட விழாவில் நான் எந்த மொழி குறித்தும் தவறாக பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன். எனவே, சிலர் அரசியல் காரணத்திறாக என்மீது வன்மத்தை கொட்டுகிறார்கள். அவர்களிடம் மன்னிப்பும் கேட்க மாட்டேன், பதிலும் சொல்ல மாட்டேன். அனைத்து மாநில மக்கள் மீதும் என் அன்பு தொடர்ந்துக்கொண்டே இருக்கும்” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

unknown node