சென்னை :இறப்பதற்கு முன்பு நடிகர் பிஜிலி ரமேஷ் தனது மனைவியிடம் ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் நடிக்கவேண்டும் என தனது கடைசி ஆசையை கூறியிருக்கிறார்.
நகைச்சுவை நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகருமான பிஜிலி ரமேஷ் குடிப்பழக்கத்தின் விளைவாக ஏற்பட்ட கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஜிலி ரமேஷ் மண்ணை விட்டு மறைந்த நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு பேசிய பல விஷயங்கள் வெளிவந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாகத் தயவு செய்து யாரும் குடிக்கவேண்டாம்… குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் தான் எனக்கு இந்த நிலைமை வந்துவிட்டது யாரும் குடிக்காதீர்கள் என அட்வைஸ் செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடைசியாகப் படுத்த படுக்கையில் கூட நோயை வைத்து கொண்டு அவர் ஆசைப்பட்ட கடைசி விஷயம் பற்றிய தகவலும் வெளிவந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரஜினிகாந்த்துடன் நடிக்க வேண்டும் என்பது தான் பிஜிலி ரமேஷுடைய பெரிய ஆசையாக இருந்துள்ளது. பேசவே முடியாத நிலையில், இறப்பதற்கு முன்பு பிஜிலி ரமேஷ் வீட்டிலிருந்தபோது யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அப்போது தொகுப்பாளர் உங்களுக்கு திரைத்துறையில் நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கிறதா? எனக் கேள்வி கேட்க, அதற்குப் பதில் அளித்த பிஜிலி ரமேஷ் ” எனக்கு என்னுடைய தலைவன் ரஜினிகாந்த்துடன் நடிக்கவேண்டும் என்பது மட்டும் தான் ஆசை” என உருக்கமாகப் பேசியுள்ளார்.
அதைப்போல, இறப்பதற்கு முன்னதாக தன்னுடைய மனைவியிடம் ரஜினி சார் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். அவருடன் பக்கத்தில் நிற்பது போல ஒரே ஒரு காட்சியிலாவது நடிக்கவேண்டும். நான் இறப்பதற்குள் அந்த ஒரு ஆசை நிறைவேற வேண்டும் என எமோஷனலாக பேசியுள்ளார். ஆனால், தன்னுடைய கணவரின் அந்த ஆசை நிறைவேறாமல் சென்றதாகவும், “கட்டில்ல அவர் தலைக்கு மேல ரஜினி போட்டோ தான் வச்சுருப்பாரு” எனவும் அவருடைய மனைவி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இறப்பதற்கு முன்பு கூட அவர் ரஜினிகாந்த்துடன் நடிக்க ஆசைப்பட்டது ரஜினியை அவருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை உணர்த்துகிறது.எனவே , அவருடைய மனைவி கூறியதை வைத்து இறப்பதற்கு முன்பு அவர் ரஜினியுடன் ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாமே எனவும் ரசிகர்கள் சோகத்தோடு தெரிவித்து வருகிறார்கள்.
