டெல்லி : லாங் ரைடு போறவங்களோட ஆல்டைம் ஃபேவரிட் பைக்கான 'அவெஞ்சர்' மாடலில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய 2026 அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 (Avenger Street 220) பைக்கை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய க்ரூஸர் பைக்கிற்கு ரூ.1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என செம பட்ஜெட் விலையை ஃபிக்ஸ் பண்ணியுள்ளது பஜாஜ். ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் அவெஞ்சர் குரூஸ் 220 மாடலை விட இது கொஞ்சம் கூடுதல் விலை என்றாலும், இதிலுள்ள மாற்றங்கள் பைக் பிரியர்களைக் கவரும் வகையில் உள்ளது.
இன்ஜினைப் பொறுத்தவரை, பழைய குரூஸ் 220 மாடலில் இருக்கும் அதே 220 சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் இன்ஜின் தான் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 19 பிஎச்பி பவரையும், 17.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
லுக்கைப் பொறுத்தவரை பஜாஜ் சில முக்கியமான சேஞ்சஸ் செய்திருக்கிறார்கள். குரூஸ் மாடலில் இருந்த அந்தப் பெரிய கிளாஸ் விண்ட்ஸ்கிரீனுக்குப் பதிலா, இதுல சின்னதா ஒரு க்யூட் ஹூட் (முகப்பு கவசம்) கொடுக்கப்பட்டுள்ளது. லாங் ரைடில் பின்னாடி உட்காருபவர்களுக்கான பேக்ரெஸ்ட்டும் (முதுகு தாங்கி) இந்த மாடலில் தூக்கப்பட்டுவிட்டது.
பைக் முழுக்க செம ரக்கடான பிளாக் தீமில், கருப்பு மற்றும் சிவப்பு கலந்த டூயல் டோன் கலர் ஆப்ஷனில் பார்க்கவே செம மாஸாக இருக்கிறது. அதைப்போல, ஹேண்டில்பாரும் குரூஸ் மாடலை விட கொஞ்சம் தாழ்வாக, நேராக மாற்றப்பட்டுள்ளது. கால்களை வைக்கும் பொசிஷனில் எந்த மாற்றமும் இல்லை.
பைக்கின் மொத்த எடை 163 கிலோ. தினசரி ஆபீஸ் பயன்பாட்டிற்கும், வார இறுதியில் லாங் ரைடு செல்வதற்கும் ஒரு பெர்ஃபெக்ட் க்ரூஸர் பைக்கை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு இந்த மாடல் ஒரு நல்ல சாய்ஸ்.
ஓட்டுவதற்கு வசதியாக இருக்க சீட் ஹைட்டை 737 மில்லிமீட்டராகக் குறைத்துள்ள பஜாஜ், மைலேஜிலும் வாடிக்கையாளர்களை ஏமாற்றவில்லை. இந்த பைக் சிட்டியில் 35 முதல் 38 கி.மீ வரையும், ஹைவேயில் லாங் ரைடு செல்லும்போது 40 முதல் 43 கி.மீ வரையும் தாராளமாக மைலேஜ் தரும் என்பதால் ஒட்டுமொத்தமாக 40 கி.மீ வரை ஆவரேஜ் மைலேஜை எதிர்பார்க்கலாம்.
13 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் டேங்கை ஒருமுறை ஃபுல் செய்தால் 500 கிலோமீட்டர் வரை நிம்மதியாகப் பயணிக்க முடியும் என்பதால், விற்பனை நிறுத்தப்பட்ட அவெஞ்சர் ஸ்ட்ரீட் 160 மாடலின் இடத்தை இந்த புதிய 220 மாடல் மிகக் கச்சிதமாக நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
