டெல்லி : இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், தினசரி அலுவலகம் மற்றும் கல்லூரி செல்பவர்களின் மாதாந்திர செலவு எகிறி வருகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக, கியர் பைக்குகள் போன்ற அதே ரைடிங் அனுபவத்தை பெட்ரோல் செலவே இல்லாமல் தரக்கூடிய எலக்ட்ரிக் பைக்குகளுக்கு (Electric Motorcycles) மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில், நடுத்தர மக்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் தற்போதைய சந்தையில் சக்கைப்போடு போடும் ஆட்டுமொபைல் ஆட்டம் 1.0 (Atumobile Atum 1.0), ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் (Ola Roadster X) மற்றும் ரிவோல்ட் ஆர்வி1 (Revolt RV1) ஆகிய மூன்று வெவ்வேறான எலக்ட்ரிக் பைக்குகளின் முழு விபரங்களையும் விரிவாக ஒப்பிட்டுப் பார்ப்போம்.
Atumobile Atum 1.0
இந்த பைக், மிகக் குறைந்த முதலீட்டில் ஒரு எளிய எலக்ட்ரிக் பைக்கைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கான ஒரு பிரத்யேக மாடலாகும். இதனுடைய எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை வெறும் ரூ.61,500 மட்டுமே. ஒரு லட்சத்திற்கும் மிகக் குறைந்த விலையில் ஒரு புது எலக்ட்ரிக் பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தொடக்கமாகும்.இதில் 0.34 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. தினசரி 20 முதல் 30 கிமீ மட்டுமே பயணிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு இந்த மைலேஜ் மிகவும் போதுமானது.
இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஆகும். முக்கியமாக, இதன் பேட்டரியைக் கழற்றி வீட்டிற்குள் எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் (Removable Battery) வசதி இதில் உள்ளது.வழக்கமான பைக்குகளில் இல்லாத ஒரு ஸ்பெஷல் வசதியாக, இதில் சிறிய ரக சாமான்களைப் பாதுகாப்பாக வைக்க 14 லிட்டர் பூட்டக்கூடிய ஸ்டோரேஜ் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 250W ஹப் மோட்டார், டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் எல்இடி விளக்குகள் உள்ளன. வண்டியின் மொத்த எடை வெறும் 51 கிலோ மட்டுமே என்பதால், கூட்ட நெரிசலில் கையாளுவது மிகவும் எளிது. இதனுடைய அதிகபட்ச வேகம் மணிக்கு வெறும் 25 கிமீ மட்டுமே என்பதால், இது நெடுஞ்சாலைகளுக்கு ஏற்றது அல்ல.உள்ளூர் ஏரியா பயன்பாட்டிற்கு மட்டுமே கச்சிதமாகப் பொருந்தும். தமிழ்நாட்டில் இதன் இருப்பு விபரங்களை ஆட்டுமொபைல் இணையதளம் வழியாக அருகில் உள்ள டீலர்களைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளலாம்.
Ola Roadster X
Atumobile Atum 1.0 மாடலை விட பலமடங்கு கூடுதல் வேகம், மைலேஜ் மற்றும் பவர்ஃபுல்லான செயல்திறனுடன் ஒரு அசல் ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவத்தைத் தருவது ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் ஆகும். இதனுடைய ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.05 லட்சம் முதல் தொடங்குகிறது. நீங்கள் தேர்வு செய்யும் பேட்டரி அளவைப் பொறுத்து விலை மாறும்.மைலேஜ் மற்றும் பேட்டரி ஆப்ஷன்களில் ஓலா நிறுவனம் இதில் மிகப்பெரிய அதிரடியைக் காட்டியுள்ளது. இந்த பைக் 2.5 kWh பேட்டரியுடன் 140 கிமீ மைலேஜும், 3.5 kWh பேட்டரியுடன் 196 கிமீ மைலேஜும் வழங்குகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இதனுடைய 4.5 kWh டாப் வேரியண்ட் மாடல் சிங்கிள் சார்ஜில் 252 கிலோமீட்டர் வரை அசாத்திய மைலேஜை (IDC Range) வாரி வழங்குகிறது. இந்த பெரிய பேட்டரியை 0-விலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 5.9 மணி நேரம் ஆகும்.
இதன் பேட்டரி வேரியண்ட்டைப் பொறுத்து மணிக்கு 105 கிமீ முதல் 118 கிமீ வரை அசாத்திய டாப் ஸ்பீடில் வண்டி சீறிப்பாயும். இதனால் சிட்டி மட்டுமன்றி நெடுஞ்சாலைகளிலும் இந்த பைக்கை அசால்ட்டாக ஓட்டலாம்.தொழில்நுட்ப வசதிகளில் இந்த பைக் ஒரு மினி காரை ஞாபகப்படுத்துகிறது. இதில் ஓலாவின் புதிய மூவ்ஓஎஸ் 5 (MoveOS 5) மென்பொருள், பிரேக்-பை-வயர் தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ரோல் (Cruise Control), வண்டியைப் பார்க்கிங் செய்ய உதவும் அசிஸ்ட், 4.3-இன்ச் கலர் எல்சிடி திரை மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் வசதிகள் நிறைந்துள்ளன. இதில் பைகள் வைக்க 3.27 லிட்டர் அளவில் மட்டுமே சிறிய பூட் ஸ்பேஸ் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது.
Revolt RV1
மிகக் குறைந்த விலை கொண்ட ஆட்டம் 1.0 மாடலுக்கும், அதிக விலை கொண்ட ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடலுக்கும் இடையில் கச்சிதமான பட்ஜெட்டில் ஒரு முறையான தினசரி பயன்பாட்டு பைக்காக வலம் வருவது ரிவோல்ட் ஆர்வி1 ஆகும். இதனுடைய எக்ஸ்-ஷோரூம் விலை சரியாக ரூ.99,999 முதல் தொடங்குகிறது. ஒரு லட்சம் பட்ஜெட்டிற்குள் ஒரு அசல் கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக்கைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சூப்பர் ஆப்ஷன்.இந்த பைக் சிங்கிள் சார்ஜில் 100 கிலோமீட்டர் மைலேஜ் (IDC Range) வழங்குகிறது. தினசரி ஆபீஸ் மற்றும் கல்லூரி சென்று வர இந்த மைலேஜ் மிகவும் போதுமானது.
இந்த பைக்கின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இதனுடைய அதிவேக சார்ஜிங் வசதிதான். இது வெறும் 2 மணி நேரம் 15 நிமிடங்களிலேயே 0-விலிருந்து 80 சதவீதம் வரை மிக விரைவாக சார்ஜ் ஆகிவிடும். மேலும், இதன் பேட்டரியையும் கழற்றி வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ எடுத்துச் சென்று சார்ஜ் செய்து கொள்ளலாம். அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) வசிப்பவர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதம் ஆகும்.இதில் 6-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே திரை, வண்டியைப் பின்னாடி எடுக்க உதவும் ரிவர்ஸ் மோடு போன்ற பயனுள்ள வசதிகள் உள்ளன.
பெட்ரோல் பைக்குகள் போல இதில் இன்ஜின் ஆயில் மாற்றவோ, ஸ்பார்க் பிளக் அல்லது ஏர் ஃபில்டர்களை மாற்றவோ வேண்டிய அவசியம் இல்லாததால் இதன் பராமரிப்புச் செலவு ஜீரோ ஆகும். இதனுடைய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் ஆகும், இது சிட்டி டிராஃபிக்கிற்கு கச்சிதமாகப் பொருந்தும். மேலும், பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆப்ஷனையும் ரிவோல்ட் நிறுவனம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ஓசூர் என மிக விரிவான டீலர் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளதால் இதன் சர்வீஸ் சப்போர்ட் மிகவும் சிறப்பாக இருக்கும்.
