வேலூர் மாவட்டம், பூமலை முருகன் கோயில் சிலை திருட்டு வழக்கு விசாரணை..!

வேலூர் மாவட்டம், பூமலை முருகன் கோயில் சிலை திருட்டு வழக்கை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை

வேலூர் மாவட்டம், பூமலை முருகன் கோயில் சிலை திருட்டு வழக்கை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில், விலை மதிப்பற்ற சிலைகளை திருடி விற்பனை செய்து வரும் கும்பலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்தப் பிரிவின் ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்ற பின்னர், கோயில்களில் திருடு போன, நூற்றுக்கும் அதிகமான பழமையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சிலை திருட்டுகள் தொடர்பாக, 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் கும்பலிடம் சிலைகள் மீட்கப்பட்டபோதும், அவை எந்தக் கோயில்களிலிருந்து திருடப்பட்டவை என கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதற்கு இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளின் தவறான அணுகுமுறையே காரணம் என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

அதாவது, கோயில்களில் சிலைகள் திருடுபோனால், அதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளிப்பதில்லை. களவு போன சிலைகளுக்கு மாற்றாக, போலியாக புதிய சிலை ஒன்றை அங்கு நிறுவி விடுகின்றனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் சிலை உள்ளிட்ட மொத்தம் 6 சிலைகள் களவுபோன நிலையில், அவற்றைப் போலவே போலியான சிலைகளை மாமல்லபுரத்தில் வடித்து கோயிலில் வைத்தது நினைவுகூரத்தக்கது.

பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற பிறகு, வேலூர் மாவட்டத்தில், போலீசாரால் கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட 2 சிலை திருட்டு வழக்குளில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் சோழபுரத்தில் பழமையான விநாயகர் கோயிலில் திருடப்பட்ட, வேலைப்பாடுகள் மிக்க சிலைகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், பேர்ணாம்பட்டு பங்களாமேடு அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட சிலைகளை பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் விரட்டிப் பிடித்தனர். அதில் மீட்கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள், ஆம்பூர் பூமலை முருகன் கோயிலில் திருடப்பட்டவை என கண்டுபிடிக்கப் பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி, பூமலை முருகன் கோயிலில், இந்தச் சிலைகள் திருடப் பட்டுள்ளன. திருடு போன அந்த நாளில், பேர்ணாம்பட்டு போலீசார் கோயிலுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்வில்லை. மோப்பநாயை கொண்டு சென்று சிலையை திருடியவர்களைப் பிடிக்க முயலவில்லை. சாதாரணமான ஒரு வழக்கைப்போலவே அணுகிய போலீசார், பெயரளவுக்கு விசாரணை நடத்தி விட்டு, கைவிட்டுவிட்டனர்.

சம்பவ இடத்தில் கிடைத்ததாக பக்தர்கள் கொடுத்த, பூட்டுகள், கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்புக்கம்பிகள் போன்றவற்றை பேர்ணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டு பொருட்படுத்தவே இல்லை. வேலூர் மாவட்ட எஸ்.பி.யும் சிலை திருட்டு நடந்த கோயிலை நேரில் பார்வையிடாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிவுறுத்தலின்பேரிலேயே பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தினர் இவ்வாறு நடந்து கொண்டதாக பக்தர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் மீட்கப்பட்டபோது, கைதான ஈஸ்வரன், ஆறுமுகம் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், சிலை திருட்டில் ஆம்பூர் முன்னாள் டி.எஸ்.பி. தனராஜூக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின்பேரில், எற்கனவே லஞ்ச வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியில் வந்த தனராஜை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, பூமலை முருகன் கோயில் சிலை திருட்டு வழக்கை, சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் விசாரித்தால், மேலும் பலர் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பூமலை கோயில் சிலை திருட்டு வழக்கை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்