திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காய்கறிச் சந்தையாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு, திண்டுக்கல், பழனி, பாச்சலூர், தாண்டிக்குடி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கோடைமழை பெய்து வருவதையொட்டி, சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக காய்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைகாய் தற்போது 8 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்பனையான மாங்காய் 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 5 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் சுரைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் பயிரிட்டிருந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.