அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பான தனது முடிவை நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அணு ஆயுதஒப்பந்த ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ட்ரம்ப்பின் இந்த விமர்சனத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியும் தக்க பதிலடி அளித்து வந்தார். அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் அது அந்நாட்டின் வரலாற்று தவறாக அமையும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த நிலையில் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரானுடனான ஆணுஆயுத ஒப்பந்தம் குறித்த தனது முடிவை நாளை மதியம் 2 மணியளவில் அறிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழ் நிலையில் இது தொடர்பாக ட்ரம்ப் நாளை தன் முடிவை அறிவிப்பதாக கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது