விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் உதுமான் முகைதீன், கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்தனர். பின்னர் விவசாயிகள் தலையில் கருப்புதுணியால் முக்காடு போட்டு கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு அவர்கள் மீண்டும் கூட்ட அரங்கிற்கு வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் பேசும்போது, தமிழ்நாடு மின்சார வாரியம் சோமரசம்பேட்டை கிளை அலுவலக பராமரிப்பில் உள்ள மின்மாற்றியையும், கொடியாலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட அயிலாப்பேட்டையில் உள்ள மின்மாற்றியிலும் குறைந்த அழுத்த மின்சாரம் கிடைப்பதால் குடியிருப்பு பகுதியிலும், தெரு விளக்குகள் சரிவர எரியா மலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஆகவே அங்கு கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றிகளை அமைத்து தர வேண்டும்” என்றார்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணை செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன் பேசுகையில், “திருச்சி உள்பட பல மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. மின் சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே தெரியவில்லை” என்றார். அதற்கு பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், “தமிழகத்தில் மின்வெட்டே எங்கும் கிடையாது. மின்மாற்றியில் பழுது காரணமாக வேண்டுமானால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு இருக்கலாம்” என்றார். இதையடுத்து அனைத்து விவசாயிகளும் எழுந்து நின்று அறிவிக்கப் படாத மின்வெட்டு இருப்பது உண்மை. இதனால் நீர்பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் நிலை உள்ளது என்றனர். தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.