கர்நாடக மாநிலத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில ஆங்கில வழி பள்ளி மேலாண்மைக் கழகம், தேர்தலில் வாக்களிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆங்கில வழி பள்ளி மேலாண்மை கழகத்தின் செயலாளர் ஷசி குமார் கூறுகையில், “தேர்தலில் அனைவரும் வாக்களித்து, நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் ஆங்கில வழி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் வாக்களிக்க கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
வாக்களித்த பெற்றோர்கள் தங்களது விரலில் வைக்கப்பட்ட மையை பள்ளியில் காண்பிக்க வேண்டும். அவ்வாறு தந்தை, தாய் காட்டினால் தலா 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கடந்த முறை சோதனை அடிப்படையில் இந்த முயற்சியை மேற்கொண்டபோது, 2 ஆயிரம் மாணவர்களில் 1,700 மாணவர்களின் பெற்றோர் வாக்களித்து இருந்தனர். எங்களது அமைப்பில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளின் மாணவர்களும் இதில் பங்கேற்பார்கள்” என்றார்.