டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் புறவழி அதிவேகச் சாலை கடந்த மாதம் 29-ம் தேதியே திறக்கப்படவிருந்த நிலையில், பிரதமர் மோடி சீனா பயணம் மற்றும் கர்நாடக தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களால் திறக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோக்கூர், தீபக் குப்தா, 2 லட்சம் வாகனங்கள் பயணிக்கக் கூடிய 6 வழிச்சாலையை திறக்க பிரதமர் வரவேண்டும் என ஏன் காத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நிலையில் மக்கள் நலனில் தாமதம் கூடாது எனவும், அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் வரும் 31-ம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு சாலையைத் திறக்குமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேகாலயாவில் உயர்நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படாமலே 5 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.