சேலத்தில் உள்ள பிரபல ரவுடி சித்தேஷ்வரன் கைது..!

பிரபல ரவுடி சித்தேஷ்வரன், சேலத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில் பெண்களை மிரட்டி பணம் பறித்தும், பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார். இவரை போலீசார் கைது

பிரபல ரவுடி சித்தேஷ்வரன், சேலத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில் பெண்களை மிரட்டி பணம் பறித்தும், பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த அபர்ணா, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சின்னேரிவயல்காடு பகுதியில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இதேபோல் அங்கம்மாள் காலனியை சேர்ந்த அரவிந்த், அழகாபுரம் தோப்புக்காட்டில், பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரு இடங்களுக்கும் சென்ற ரவுடிகள் சிலர், கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல், அஸ்தம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள ஒரு அழகு நிலையத்திலும் ரவுடிகள் கைவரிசை காட்டியுள்ளனர். மேலும் அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ரவுடிகளின் அட்டூழியம் குறித்து, மசாஜ் சென்டர்களின் உரிமையாளர்கள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கரிடம் புகார் செய்தனர். இதன் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடிகளான அஸ்தம்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன், எலும்பன் கார்த்தி , விஜயக்குமார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் தேடப்பட்ட வந்த நிலையில், ரவுடிகள் சித்தேஷ்வரன் , பாலு என்கிற பாலகிருஷ்ணன் , முகமது ஹரீப் , சதீஷ் , தேவராஜன் உள்ளிட்ட ரவுடிகள் இன்று காலை போலீசாரிடம் சிக்கினர். அவர்களை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ரவுடி சித்தேஷ்வரன் மீது பொதுமக்களை மிரட்டியது , பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளை தவிர அஸ்தம்பட்டி , ஜான்சன்பேட்டை ஆகிய பகுதிகளில் மேலும் பல ரவுடிகள் உள்ளதாகவும், அவர்கள் மிரட்டி பணம் வசூலிப்பது, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களையும் கூண்டோடு கைது செய்தால் தாங்கள் பயமின்றி இருப்போம் என்கிறார்கள்  மக்கள்.