கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் (வியாழக்கிழமை) ஓய்கிறது. இதனால் தேர்தல் களத்தில் உச்சக்கட்ட அனல் தகிக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். தென்னிந்தியாவில் கால் பதிக்க வேண்டும் என்றால் கர்நாடகவே வாய்ப்பு உள்ள இடமாக பார்க்கும் பா.ஜனதா, அங்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தீவிரமாக இறங்கி உள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் பிற தலைவர்கள், மந்திரிகள் என மையம் கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு இறக்குமதியான வட இந்திய தலைவர்களால் எடியூரப்பா டம்மியாக்கப்பட்டார் என சித்தராமையா விமர்சனம் செய்தார். வட இந்தியாவில் இருந்து மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற தலைவர்களை பா.ஜனதா இறக்குமதி செய்வதாக குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். இந்நிலையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய எடியூரப்பா, 2013 தேர்தலுக்கு முன்னதாக நான் பாரதீய ஜனதாவில் இருந்து விலகியதால், காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது, இப்போது எங்களுக்குள் எந்தஒரு பிரச்சனையும் கிடையாது கண்டிப்பாக தேர்தலில் வெற்றியடைவோம் என்றார். அப்போது பாரதீய ஜனதாவில் இருந்து விலகியதற்கு வருத்தப்படுகிறேன், தவறு செய்துவிட்டேன் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
கர்நாடக தேர்தலில் வெற்றியடைய பாரதீய ஜனதா நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவை பெரிதும் நம்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிஉள்ள எடியூரப்பா, “பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய தலைவர். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை அவர் விரும்புகிறார். அதனால் அவர் பெரும்பாலான நேரத்தை செலவு செய்கிறார், எங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அவருடைய நல்ல பணிக்காக நாங்கள் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம். தேசிய நெடுஞ்சாலைகள், ரெயில்வே மற்றும் கர்நாடக உள்கட்டமைப்பிற்கு பெருமளவு நிதியை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்து உள்ளார்,” என பதில் அளித்து உள்ளார்.
காங்கிரஸ் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் பிரசாரத்திற்கு அழைத்து வந்து உள்ளது, ஆனால் நான் பிரதமர் மோடியை அழைத்துவரும் போது கூச்சலிடுகிறது எனவும் கூறி உள்ளார் எடியூரப்பா