8 தனிப்படைகள் அமைத்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு நேற்று வந்த 5 கொள்ளையர்கள், தரையில் துப்பாக்கியால் சுட்டு வங்கி லாக்கரில் இருந்த 80 கிராம் தங்க நகைகள், காசாளர் அறையில் இருந்த 6 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளைகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் பழைய மாடல் பியட் காரில் வந்ததும், நெல்லை வட்டார வழக்கில் பேசியதும் தெரியவந்தது. கொள்ளை தொடர்பாக வங்கிமேலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்றது. ஆனால் கொள்ளை குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொள்ளையர்கள் வர வாய்ப்பிருந்ததாகக் கருதப்படும் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்