‘நீட்’ தேர்வு தமிழ் வழி வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தைபிழைகள் உள்ளது. எனவே கருணை மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘நீட்’ தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேருக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு,பிள்ளைகளை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்ற 2 தந்தைகள் மரணம் என ‘நீட்’ தேர்வு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த குளறுபடிக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தான் காரணம் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ‘நீட்’ தேர்வு தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. 49 கேள்விகளில் 68 வார்த்தை பிழைகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வெழுதிய கேரள மாணவி ஒருவர், சோதனை என்ற பெயரில் தனது உள்ளாடையை அகற்ற அதிகாரிகள் நிர்பந்தித்தாகவும் புகார் கூறினார். இதுகுறித்து மாணவி சார்பில் பாலக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சோதனையின்போது மேல் உள்ளாடைகளை கழற்றுமாறு சோதனையாளர்கள் கூறினார்கள். எனது ஆடையில் மெட்டல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தார்கள். எனக்கு உள்ளாடையை கழற்ற ஒருமாதிரியாக இருந்தது. பின்னர் கழற்றினேன்.
உள்ளாடையை கழட்ட நேர்ந்த போது மிகவும் அவமானமாக உணர்ந்ததாகவும், தன்னுடன் சேர்த்து மேலும் 25 மாணவிகளின் மேல் உள்ளாடைகளை சோதனையின் போது கழற்ற வைத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வு கட்டுப்பாடுகளை எதிர்த்து பாடகி சின்மயி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வு சோதனைகள் மிகவும் அபத்தமானதாக இருக்கிறது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் பல்வேறு விஷயங்களுக்கு மத்தியில் மெட்டல் கொக்கி இல்லாத உள்ளாடைகளையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இது ஏன் என விளங்கவில்லை.
பீகார் போன்ற மாநிலங்களில் மாணவர்கள் செய்யும் மோசடி தான் இந்த அபத்தமான சோதனைக்கு காரணம் என கருதுகிறேன். அந்த மாணவர்களை மட்டுமே முன் உதாரணமாக வைத்து இவர்கள் அனைத்து மாணவிகளின் உள்ளாடைகளையும் கூட சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். மோசமான சிபிஎஸ்இ நிர்வாகம். கடந்தகால மோசமான தேர்வு மோசடிகளை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்