மோடி, கர்நாடகாவைப் பற்றிப் பேச மறுக்கிறார்: ராகுல்காந்தி..!

கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்

கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் அமரப் போவது யார்? என்பதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது.

கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது.

இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் மிக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் சித்தராமையா, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா,  எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்    ராகுல்காந்தி  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்.  கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. கடந்த 2 மாதமாக கர்நாடகாவில் சுற்றுபயணம் மேற்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமையாக உள்ளது. காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். மாநில மக்களுக்கு தெளிவான கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை அளித்துள்ளோம். நாங்கள் அடிப்படை பிரச்சினைகளுக்காக உழைத்து வருகிறோம்.

என்னைப் பற்றியே பேசும் மோடி, கர்நாடகாவைப் பற்றிப் பேச மறுக்கிறார். காங்கிரசின் போராட்டம், ஊழல் பா.ஜ.,விற்கு எதிரானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதே பா.ஜ.,வின் கொள்கையாக உள்ளது. ரபேல் ஒப்பந்தம் மோடிக்கும், அவரது நண்பர்களுக்கு மட்டுமே உதவியுள்ளது. ரூ. 700 கோடி மதிப்புள்ள விமானங்களுக்கு 1,500 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளது. இது குறித்த கேள்விகளுக்கு மோடியிடம் பதில் இல்லை. முக்கிய விஷயங்களில் மோடி மவுனமாக உள்ளார். தலித்துகளுக்கு எதிரான பிரச்சினைகளில் மோடி மவுனத்தையே கடைபிடிக்கிறார். கர்நாடகாவின் அடிப்படைப் பிரச்சினைகளை புறக்கணிக்கிறார் பிரதமர் மோடி. இந்து என்பதன் அர்த்தத்தை பாஜக புரிந்துகொள்ளவில்லை.

பாஜக ஆட்சியில் பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை என்பது முழுமையான அரசியல் விவகாரம். விவசாயிகளுக்கு பாஜக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. விவசாய கடனில் பெரும் பகுதியை கர்நாடக அரசு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

பிரதமர் குறித்த பிரதமர் மோடி விமர்சனம் குறித்து  ராகுல்காந்தி கூறியதாவது;-

என் தாயார்  பல இந்திய மக்களை விட  இன்னும் இந்தியராக இருக்கிறார். என் அம்மா இந்த நாட்டுக்காக  தியாகம் செய்துள்ளார். அவர் இந்த நாட்டிற்காக துன்பப்பட்டார் என அவர் கூறினார்.   அவர் இந்த கருத்துக்களை கூறும் போது, அது பிரதமரின் தரத்தைக் காட்டுகிறது ” என கூறினார்