காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள், பிரிவினைவாதிகளால் இளைஞர்கள் தவறான வழியை தேர்வு செய்யும் அவலநிலையானது நீடிக்கிறது. பயங்கரவாத பாதையை இளைஞர்கள் தேர்வு செய்யும் துரதிஷ்டவசமான நிகழ்வும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், சுதந்திரம் என கூறி ஆயுதம் தூக்கும் இளைஞர்களுக்கு எச்சரிக்கையை விடுத்து உள்ளார். ஜம்மு காஷ்மீரில் வன்முறையான சூழ்நிலை நிலவுவது தொடர்பாக ஸ்திரமான கருத்தை பதிவு செய்து உள்ள பிபின் ராவத், “இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை ஒருபோதும் பிரிக்க முடியாது,” என கூறிஉள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையிலான மோதலை தினமும் பார்த்து வருகிறது. இருதரப்பு இடையே சண்டை நடைபெறும் போதே பயங்கரவாதிகளை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களும் கற்களை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு நேரிட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இடையூறாக பொதுமக்களை தூண்டி விடுபவர்களுக்கு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கையை விடுத்து உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிஉள்ள பிபின் ராவத், “பெருமளவு மக்கள் வெளியே வந்து எங்களுடைய ஆப்ரேஷனை தடுக்கும் வகையில் நடப்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பயங்கரவாதிகள் கொல்லப்படக்கூடாது என்று நினைத்தால், அவர்கள் (பொதுமக்கள்) பயங்கரவாதிகளிடம் சொல்ல வேண்டும், ஆயுதமில்லாமல் வெளியேவர வேண்டும் என்று,” என குறிப்பிட்டு உள்ளார். காஷ்மீரில் போராட்டங்கள், கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறும் போது சுதந்திரம் என்ற கோஷமும் எழுப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பதிலளித்து பேசிஉள்ள பிபின் ராவத், “இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது என காஷ்மீர் இளைஞர்களிடம் சொல்லிக்கொள்கிறேன், இது சாத்தியமானது கிடையாது, நடக்கவும் நடக்காது, தேவையற்ற முறையில் ஆயுதங்களை எடுக்காதீர்கள், நீங்கள் ஆயுதங்களை எடுப்பது ஏன்? பிரிக்க வேண்டும் என்பவர்களுக்கு எதிராக எங்களுடைய நடவடிக்கையும் தொடரும்” என்றார்.
பயங்கரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேர்வது தொடர்பாக பேசிய பிபின் ராவத், “இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைவதால் ஒன்றும் நடக்கப்போவது கிடையாது என்பதை சொல்லிக்கொள்கிறேன், பயங்கரவாத இயக்கத்தில் இணைவதால் எதையும் சாதிக்க முடியாது. நீங்கள் ராணுவத்துடன் போரிட முடியாது,” என்றார். என்கவுண்டர்கள் நடக்கும் போது உயிரிழப்பு சம்பவங்கள் நேரிடுவது தொடர்பாக பேசிய ராவத், நாங்கள் அதனை (பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் காயம்) மகிழ்ச்சியாக எதிர்க்கொள்ளவில்லை. நீங்கள் எங்களுடன் போரிட விரும்பினால் எங்களுடைய பதிலடியும் தொடரும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய ராணுவம் ஒருபோதும் கொடூரமான முறையில் நடக்கவில்லை, சிரியா மற்றும் பாகிஸ்தானை பாருங்கள். அவர்கள் இங்கு உள்ளதை போன்ற சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் போது டாங்கிகள், வான்படை பலத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பொதுமக்கள் உயிரிழப்பு என்பதை தவிர்க்கும் வகையில் நம்முடைய படைகள் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என கூறிஉள்ளார் பிபின் ராவத்