கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் அதிரடி..!

தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவு, பெங்களூருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுமார் 10,000 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவு, பெங்களூருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுமார் 10,000 வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு பெங்களூரு பகுதியிலுள்ள ராஜராஜேஸ்வரி தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து 9,746 வாக்காளர் அடையாள அட்டைகள் நேற்று நள்ளிரவு கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் அந்த தொகுதிக்கு உட்பட்ட சேரி பகுதிகளில் வசிப்பவர்களுடையது எனத் தெரிகிறது.

எனினும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, 3 தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். மேலும் , அந்த குடியிருப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தேர்தல் ஒப்புகைச் சீட்டுகளில் பல போலியானவை. விசாரணியின் முடிவில் ஒப்புகைச் சீட்டுகளின் பின்னணி குறித்து தெரியவரும்.

கர்நாடகாவின் சராசரியைவிட ராஜராஜேஸ்வரி தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,35,439. வாக்காளர் பட்டியலில் 44,837 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறுகையில், ”வாக்காளர் அட்டைகள் இருந்த வீடு காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமானது; போலி பெயர்களை வாக்காளர் அட்டைகளில் சேர்க்க காங்கிரஸ் முயற்சிக்கிறது”  என்று குற்றம்சாட்டினார்.

இதனிடையே,  “அந்தக் குடியிருப்பின் உரிமையாளர் காங்கிரசை சேர்ந்தவர் என்றபோதிலும், வீட்டை அவரது மகனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது மகன் பாஜகவை சேர்ந்தவர்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.