ஜெயலலிதா மரணம் தொடர்பான கேள்விக்கு தனக்கு பதில் தெரியாது : அப்பலோ மருத்துவர் சாந்தாராம்..!

அப்பலோ மருத்துவர் சாந்தாராம், ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இதயம் செயலிழந்த பின், நீரிழிவு நோய்க்கான இன்சுலின் கொடுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை என

அப்பலோ மருத்துவர் சாந்தாராம், ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இதயம் செயலிழந்த பின், நீரிழிவு நோய்க்கான இன்சுலின் கொடுக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை என ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்  பதில் அளித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் சாந்தாராம் ஆஜரானார். 2000 ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு தான் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளித்ததாக கூறினார். தான் சிகிச்சை அளித்த அந்த கால கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் தான் இருந்ததாகவும் மருத்துவர் சாந்தாராம் குறிப்பிட்டார். ஆனால் 2014ம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க தன்னை அழைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவர் சாந்தாரராம் , அப்பலோ மருத்துவமனையில் இருந்த போதும் ஜெயலலிதாவுக்கு தான் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சாந்தாராம் தெரிவித்துள்ளார். மேலும் மரியாதை நிமித்தமாகக் ஜெயலலிதாவை சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் சந்திக்க முடியவில்லை எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மாலை 4 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அதன் பின் 6 மணியளவில் அவருக்கு இன்சுலின் மருந்து கொடுத்ததாக நேற்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அப்பலோ நீரிழிவு நோய் மருத்துவர் ஜெயஸ்ரீ தெரிவித்திருந்ததார். அப்போது, மாரடைப்புக்குப் பின் எதற்காக இன்சுலின் மருந்து கொடுக்கப்பட்டது? என ஆணையம் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரான சாந்தாராமிடம் முதல் கேள்வியாக மாரடைப்புக்குப் பின் இன்சுலின் செலுத்தலாமா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழந்த பின் இரத்த ஓட்டம் இருக்காது எனவும் அப்போது எந்த மருந்து கொடுத்தாலும் பயனளிக்காது எனவும் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் எதற்காக நீரிழிவு நோய்க்கான இன்சுலின் மருந்தை அப்பலோ மருத்துவர் ஜெயஸ்ரீ கொடுத்தார் என சாந்தாராமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தகேள்விக்கு தனக்கு பதில் தெரியாது என சாந்தாராம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.