விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில், ஆணையர் இல்லாததால், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் தவிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சியில், ஆணையராக இருந்த முத்து வெங்கடேஸ்வரன், 3 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிகளை ஒதுக்குவது குறித்து ஒப்பந்ததாரர்களின் மிரட்டலுக்கு அஞ்சி தூக்கிட்டுக் கொண்டதாக சொல்லப்பட்டது.
அதன் பின்னர், ஆணையராக பொறுப்பில் இருந்த முத்து என்பவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது பிடிபட்டு, கைதாகி சிறையில் உள்ளார். தற்போது நிர்வகிக்க உரிய அலுவலர் இல்லாததால், நகரம் முழுவதும் நலத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, கடந்த 2010 – 2011 ஆண்டு 98 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. இதனால் அருப்புக்கோட்டை முழுவதும் குடிநீர் பஞ்சம் தொடர்ந்து நீடிக்கிறது.
நகராட்சியின் 36 வார்டுகளிலும், குப்பைகள் அள்ளப்படாததோடு, கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யாததால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இருக்கைகள் சேதமுற்று காணப் படுவதோடு, சுற்றுப்புறமும் துர்நாற்றம் வீசி வருகிறது. நகராட்சி முழுவதும் சாலைகள் பெயர்ந்து, வாகனங்கள் செல்ல தகுதியற்றதாக மாறியுள்ளன. அருப்புக்கோட்டையின் மோசமான நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சியில் உரிய அதிகாரிகள் இல்லாததால், இந்த அவலம் நீடிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, நேர்மையான அதிகாரிகளை நியமித்து அருப்புக்கோட்டைக்கு சுபிட்சம் அளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.