வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே தொன்மையான முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை கடத்திய இருவரை சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விரட்டிப் பிடித்துக் கைது செய்துள்ளார்.
கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் சோழபுரத்தில் காரில் மறைத்துக் கடத்தப்பட்ட பிள்ளையார் கணபதி சிலையை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டனர். இந்நிலையில், கடத்தல்காரர்களை 8 மாதங்களாகக் கண்காணித்து வந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், பேர்ணாம்பட்டில் மாருதி ஸ்விஃப்ட் காரில் சென்ற கடத்தல் கும்பலை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
இதையறிந்த கடத்தல்காரர்கள் அரவெட்டலாவில் வனத்துறை அலுவலகம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயற்சித்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஈஸ்வரன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் துரத்திச் சென்றபோது, திடீரென வீடுகளுக்குள் சுவர் ஏறிக் குதித்து இருவரும் தப்ப முயன்றனர். இருந்தும் சுமார் 200 பேர் முன்னிலையில் துரத்திப் பிடித்த ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இருவரையும் கைது செய்தார்.
கடத்தல்காரர்களிடமிருந்து 2 அடி உயரமுள்ள தொன்மையான முருகன் சிலை, தலா ஒன்றரை அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை சிலைகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் காரும் மீட்கப்பட்டுள்ளன. அவை ஆம்பூரில் ஏதேனும் கோயிலைச் சேர்ந்த தொன்மையான சிலைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட சிலைகளை 5 கோடி ரூபாய்க்கு விற்பதற்கும் முயற்சித்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.