ராஜஸ்தானில் ஒரே நேரத்தில் 500 மாடுகள் எப்படி உயிரிழந்தன?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் 500 கும் மேலான பசுக்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hero Image

ராஜஸ்தான் : ஜெய்சல்மர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி குப்பைக் கிடங்கில் அழுகிய நிலையில் கிடந்த மாடுகளின் சடலங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் என்ன?

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இத்தனை அதிக அளவில் மாடுகள் உயிரிழந்ததற்கான ஒரே ஒரு உறுதியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விசாரணையில் சில முக்கிய காரணங்கள் சந்தேகிக்கப்படுகின்றன.

கடும் வெப்ப அலை தாக்கம்

ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை கடுமையாக உயர்ந்திருந்தது. பல பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தண்ணீர் மற்றும் நிழல் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த கால்நடைகள் வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை

உள்ளூர்வாசிகள் கூறுகையில், தெருக்களில் சுற்றித் திரிந்த மாடுகளுக்கு போதுமான உணவும் குடிநீரும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் அலைந்த கால்நடைகள் பசி மற்றும் தாகத்தால் பலியாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மாடுகளுக்கு ஏதேனும் தொற்று நோய் பரவியிருக்குமா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவத்துறை மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை எந்த நோயும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சமூக வலைதளங்களில் கிளம்பிய எதிர்ப்பு

இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் வெளியானதும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. “பசுப் பாதுகாப்பு” குறித்து பெரிய அளவில் பேசப்படும் நிலையில், தரையில் கால்நடைகளின் உண்மை நிலை மோசமாக இருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பல நாட்களாக அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சடலங்களை முறையாக அகற்ற வேண்டிய ஒப்பந்ததாரர் கடும் அலட்சியம் காட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை

இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து, ஜெய்சல்மர் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. தற்போது சடலங்கள் அகற்றப்பட்டு அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் எப்படி உயிரிழந்தன?”, “அவற்றைப் பராமரிக்க வேண்டியவர்கள் யார்?”, “ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த சம்பவம் வெறும் கால்நடை உயிரிழப்பு சம்பவமாக மட்டும் இல்லாமல், பசுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகள் மீதும் பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.