உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், பத்ரிநாத் விஷ்ணுகோயிலுக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 மாத இடைவேளைக்கு பிறகு பத்ரிநாத் விஷ்ணு கோயில், பக்தர்களின் வழிபாட்டுக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், கோடை விடுமுறையை பயன்படுத்தி, பத்ரிநாத்துக்கு புனித பயணம் மேற்கொண்டு வருகிறனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் பத்ரிநாத் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், சாலைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீதும், வீடுகள் மீதும் பஞ்சுப்பொதிகள் போல, பனிக்கட்டிகள் காட்சியளிக்கின்றன. கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், பத்ரிநாத் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.