நாட்டிலேயே அதிக கார் விற்பனையாகும் டெல்லியில் கார் விற்பனை 1.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களூர் நகரில் கார் விற்பனை 11 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2017-18 நிதி ஆண்டில் சென்னையில் 4.5 சதவீதமும், மும்பையில் 20 சதவீதம் கார் விற்பனை குறைந்துவிட்டதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
2016-17 நிதி ஆண்டில் மும்பையில் 1.22 லட்சம் கார்கள் விற்பனையாகி இருந்ததன. ஆனால், சென்ற நிதி ஆண்டில் மும்பையில் 97,274 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. வரும் காலங்களில் இந்த சரிவு தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன.
டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் இருப்பதுடன், உபர் மற்றும் ஓலா நிறுவனங்களின் வாடகை கார்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதே, பெரு நகரங்களில் கார் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அலுவலகம் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுத்து களைத்து வேலையில் போய் அமர்வதால் பல்வேறு உடல் மற்றும் மனநல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அத்துடன், பார்க்கிங் செய்வதற்கும், காரை பாதுகாப்பதற்கும் பெரும் பிரச்னையாக இருப்பதும் உபர், ஓலா வாடகை கார்கள் பக்கம் பெரும்பாலானோரின் கவனம் திரும்பி இருக்கிறது. அதேநேரத்தில், இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் கார் விற்பனை அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் பயன்படுத்தும் போக்கு இங்கு அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் லக்ணோ நகரில் கார் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது, ஜெய்ப்பூர், ஆமதாபாத் மற்றும் சண்டிகர் நகரங்களில் கார் விற்பனை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, இரண்டாம் நிலை மற்றும் ஊரக பகுதிகளை நோக்கி கார் நிறுவனங்களின் கவனம் திரும்பி இருக்கிறது.