சொத்துக்காக அண்ணணே, தம்பி மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அண்ணணே, தம்பி மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அண்ணணே, தம்பி மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலாளவந்தசேரியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை செய்து சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு பணம் அனுப்பி வந்தார். ஜோசப் அனுப்பிய பணத்தில் வீடு கட்டி வசதியாக குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வடக்கு நாணலூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்தர் என்ற பட்டதாரி பெண்ணை ஜோசப் திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதன் பின்னர் சிங்கப்பூரில் வேலை பார்த்த ஜோசப் மனைவி பெயரில் பணம் அனுப்பத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப்பின் தாயார் மற்றும் சகோதரர்கள் எஸ்தரிடம் தகராறு செய்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்தரின் உறவினர் ஒருவர் திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது எஸ்தரை காணாததால் விசாரித்த போது ஜோசப்பின் சகோதரர்கள் நெல்சன், அற்புததாஸ் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்தனர். தகவலறிந்து எஸ்தரின் பெற்றோர் நேரில் வந்து விசாரித்த போது குழந்தையைவிட்டு விட்டு எஸ்தர் வேறு யாருடனோ ஓடிவிட்டதாக அவதூறு கூறியுள்ளனர். இந்நிலையில் எஸ்தரின் கிராமத்தினர் ஒன்று திரண்டு மேலாளவந்தசேரி கிராமத்தில் முகாமிட்டனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் புகாரையும் ஏற்காமல் தேவங்குடி காவல் நிலையத்தில் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மனைவியை காணவில்லை என்ற தகவலறிந்ததும் வெளிநாட்டிலிருந்த ஜோசப் ராஜசேகரும் சொந்த ஊருக்கு வந்தார். ராஜசேகர் அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரது சகோதரர்கள் நெல்சனிடம் விசாரித்ததில் எஸ்தரை தானே கொலை செய்து வேளாங்கண்ணி கடற்கரையில் வீசிவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஜோசப் ராஜசேகரின் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, எஸ்தரின் உறவினர்கள் அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

(நெல்சன் அளித்த தகவலின் பேரில் எஸ்தரின் உடலை போலீஸார் தேடினர். வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் போலீஸாருடன் சென்ற நெல்சல் உடல் வீசப்பட்ட இடத்தை காட்டாமல் அலைக்கழித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் எஸ்தரின் உடலை துண்டுகளாக வெட்டி இரண்டு மூட்டைகளில் தேவங்குடி ஆற்றில் உள்ள புதரில் வீசி விட்டதாக கூறியுள்ளார். இதன் பேரில் எஸ்தரின் உடலை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ) குடும்பத்துக்காக சொந்த ஊரைப் பிரிந்து வெளிநாட்டில் உழைத்த தம்பிக்கு சொந்த அண்ணன் துரோகம் இழைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது