சென்னை: திராவிடக்கட்சிகள் செய்யும் வேலையை பாஜவும் செய்கிறதா என்று அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார் விஜயகாந்த். எதற்காக தெரியுங்களா?
தேமுதிக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜ ஈடுபட்டுள்ளது கட்சி தலைவர் விஜயகாந்திற்கு கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. விஜயகாந்த் உட்பட பல வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்கவில்லை. அதன் பின் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியே இருக்கிறார். இந்நிலையில் அக்கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி காரைக்குடியில் நடக்க இருக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் மக்கள் பிரச்னைக்காக தேமுதிக எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. மேலும் தேர்தலில் செலவு செய்த பல வேட்பாளர்கள் கடனாளியாகியுள்ளனர். இந்நிலையில் அப்படி நொந்து போன பலரை பாஜ தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. தர்மபுரி முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ பாஸ்கர் மற்றும் சில நிர்வாகிகள் பாஜவில் இணைய இருக்கிறார்கள்.
தேமுதிக எதிர்கட்சியாக இருந்த போது, அதில் சில எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் சென்றனர். அதேபோல் தேமுதிகவின் பல நிர்வாகிகளை திமுக தரப்பு தங்கள் பக்கம் இழுத்து விஜயகாந்திற்கு எதிராக செயல்பட வைத்தது. இந்நிலையில் பாஜவும் தற்போது அந்த வேலையை தொடங்கியுள்ளது, விஜயகாந்திற்கு கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.