ஆதார் என்னும் அடையாள அட்டை எண், அரசு சேவைகளுக்கும், சமூக நல திட்டங்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இப்படி ஆதார் எண்களை இணைப்பதால், தனிநபர் பற்றிய ரகசியம் கசிய வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் ஆதாரை கட்டாயம் ஆக்கும் சட்டமும், பயோமெட்ரிக் முறையும் அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகாது என அறிவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்து உள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், மனுதாரர்கள் தரப்பிலும் அரசு தரப்பிலும் காரசார வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது