நேபாள நடிகை மீனாட்சி தாபா மும்பையில் (meenakshi thapa) தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், திரைப்பட துணை நடிகர்கள் இருவரும் குற்றவாளிகள் என மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு மும்பையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மீனாட்சி தாபா, தாம் பணக்கார வீட்டுப் பெண் எனவும், பொழுதுபோக்கிற்காக மட்டுமே படத்தில் நடிப்பதாகவும், துணை நடிகர்களான அமித் ஜெய்ஸ்வால் மற்றும் பிரீத்தி சுரின் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட அவர்கள், பணம் பறிக்கும் நோக்குடன் அலகாபாத்திற்கு நடிகையை கடத்திச் சென்றனர். பணம் கேட்டு மிரட்டிய அவர்கள் இறுதியில் பணம் கிடைக்காததால் மீனாட்சி தாபாவின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர்.
இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இருவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரங்கள் விரைவில் வெளியாகிறது.