திருவள்ளூர் அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கருதி மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்துக் கொன்று உடலை பாலத்தில் தொங்க விட்ட வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கடந்த 9ஆம் தேதி சுற்றித்திரிந்த நபரை, குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கருதி, அப்பகுதி இளைஞர்கள் கொடூரமாக அடித்து கொன்றனர். மேலும் அவரது உடலை கயிற்றில் கட்டி பாலத்தில் தொங்க விட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல் மெதூர் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில நபரை பிடித்து அடித்து உதைத்த வழக்கிலும், இருவரை போலீசார் செய்துள்ளனர்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் பீதி காரணமாக அப்பாவிகளை அடித்து உதைக்கும் பொதுமக்களை தடுக்கும் பொருட்டு ஆட்டோக்களில் போலீசார் வீதிவீதியாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். கிராமங்கள் தோறும் வீதி,வீதியாக முக்கிய சந்திப்பு உள்ளிட்டவைகளில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்