குறைந்த விலையில் குளு குளு ஏசி! பட்ஜெட் ரேட்டில் பக்காவான 3 இது தான்!

கோடை வெயிலில் ஏசி வாங்கப் போறீங்களா? ரூ.30,000க்குள் கிடைக்கும் சிறந்த ஏசி மாடல்கள் எவை, தினமும் 8 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்திற்கு எவ்வளவு கரண்ட் பில் வரும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : கோடைக்காலம் என்றாலே சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி (Air Conditioner) வாங்குவது பலருக்கும் ஒரு முக்கிய தேவையாக மாறிவிடுகிறது. ஆனால், கையில் இருக்கும் பட்ஜெட்டுக்குள் எந்த ஏசியை வாங்குவது, ஏசி வாங்கினால் மாதாந்திர கரண்ட் பில் எவ்வளவு வரும், அதை எப்படி முறையாகப் பராமரிப்பது என்ற பல குழப்பங்கள் நமக்குள் இருக்கும். எனவே, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த ஏசி மாடல்கள், மின் கட்டணக் கணக்கீடு மற்றும் ஏசியை நீண்ட காலம் உழைக்க வைக்கும் பராமரிப்பு குறிப்புகள் பற்றிய விவரங்களை இதில் காண்போம்.

குறைந்த பட்ஜெட்டில் அதிக கூலிங் மற்றும் நீண்ட காலம் உழைக்கக்கூடிய மூன்று சிறந்த ஏசி மாடல்கள் இதோ...

கோத்ரெஜ் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (Godrej 1.5 Ton 3 Star Inverter Split AC)

இது நடுத்தர அளவுள்ள அறைகளுக்கு (Medium-sized rooms) ஒரு மிகச் சிறந்த தேர்வாகும். இதில் 100% காப்பர் கூலிங் காயில் (Copper Coil) பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது நீண்ட காலம் துருப்பிடிக்காமல் உழைக்கும். மேலும், அறையில் இருக்கும் ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன் கூலிங் பவரை மாற்றியமைக்கும் ஸ்மார்ட் வசதியும் இதில் உள்ளது. சந்தையில் இதன் தற்போதைய விலை சுமார் 30,000 ரூபாய் முதல் 32,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வோல்டாஸ் 1 டன் 3 ஸ்டார் விண்டோ ஏசி (Voltas 1-Ton 3 Star Window AC)

இருப்பதிலேயே மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஏசி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த விண்டோ ஏசி ஒரு அருமையான ஆப்ஷன். இது சிறிய படுக்கையறைகளுக்கு (Small bedrooms) கச்சிதமாகப் பொருந்தும். இதை இன்ஸ்டால் செய்வதும் மிகவும் எளிது, அதே நேரத்தில் இதன் பாடி மிகவும் கடினமான உலோகத்தால் நீடித்து உழைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் இதன் விலை மிகக் குறைவாக வெறும் 24,000 ரூபாய் முதல் 26,000 ரூபாய்க்குள் கிடைக்கிறது.

லாயிட் 1.5 டன் 3 ஸ்டார் கன்வெர்ட்டிபிள் ஸ்பிளிட் ஏசி (Lloyd 1.5 Ton 3 Star Convertible Split AC)

பிரபலமான ஹேவல்ஸ் (Havells) நிறுவனத்தின் ஒரு அங்கமான லாயிட் ஏசி, வெளியூர் வெயில் 52 டிகிரி செல்சியஸ் வரை சுட்டெரித்தாலும் அறைக்குள் சிறந்த கூலிங்கைத் தரும். இதன் சிறப்பு என்னவென்றால், இது இயங்கும்போது சத்தம் மிக மிகக் குறைவாக இருக்கும். இதன் தற்போதைய சந்தை விலை சுமார் 32,000 ரூபாய் முதல் 34,000 ரூபாய் வரை உள்ளது.

கரண்ட் பில் எவ்வளவு வரும் ?

ஏசி வாங்க நினைக்கும் ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பமும் கேட்கும் முதல் கேள்வி, "இதனால கரண்ட் பில் எவ்வளவு ஏறும்?" என்பது தான். பொதுவாக, இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்ட 3-ஸ்டார் ஏசிகள் மின்சாரத்தை நன்றாகவே மிச்சப்படுத்தக்கூடியவை.

ஒரு 1.5 டன் 3-ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசியை தினமும் இரவு நேரத்தில் மட்டும் சுமார் 8 மணி நேரம் இயக்கினால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்று ஒரு எளிய கணக்கைப் பார்ப்போம்..

மாத மின் நுகர்வு (Units Consumed): இப்போதைய நவீன 3-ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும். அந்த கணக்குப்படி பார்த்தால், தினமும் 8 மணி நேரப் பயன்பாட்டிற்கு 8 யூனிட்டுகள் செலவாகும். ஒரு மாதத்திற்கு (8 யூனிட் x 30 நாட்கள்) மொத்தம் தோராயமாக 240 யூனிட்டுகள் வரை மின்சாரம் நுகரப்படும்.

தோராயமான மின் கட்டணச் செலவு

இந்தியாவில் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு தோராயமாக ரூ.5 முதல் ரூ.8 வரை வசூலிக்கப்படுகிறது.குறைந்தபட்சக் கணக்கீடாக ஒரு யூனிட்டிற்கு ரூ.6 என்று வைத்துக்கொண்டால், 240 யூனிட்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.1,440 கூடுதல் பில் வரும்.அதிகபட்சக் கணக்கீடாக ஒரு யூனிட்டிற்கு ரூ.8 என்று வைத்துக்கொண்டால், மாதத்திற்கு ரூ.1,920 வரை கரண்ட் பில் வர வாய்ப்புள்ளது.

கரண்ட் பில்லைக் குறைக்க ஒரு சூப்பர் டிப்ஸ்: ஏசியை எப்போதுமே 24°C முதல் 26°C வரையிலான வெப்பநிலையில் வைத்துப் பயன்படுத்துங்கள். ரிமோட்டில் 16°C என்று வைப்பதால் அறை சீக்கிரம் குளிர்ந்துவிடாது; மாறாக, ஏசியின் கம்ப்ரஸர் தொடர்ந்து முழு வேகத்தில் இயங்கி மின்சார மீட்டரை வேகமாக ஓட வைத்து பில்லை எகிறச் செய்துவிடும்.

ஏசி சர்வீஸ் எப்போது?

ஏசியை முறையாகவும் சரியான நேரத்திலும் சர்வீஸ் செய்வது, அது எப்போதும் புதியது போல உழைக்க உதவுவதோடு மின்சாரத்தையும் பெருமளவு மிச்சப்படுத்தும். ஏசியில் தூசிகள் அடைத்துக் கொண்டால் அது கூலிங் தர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும், இதனால் கரண்ட் பில்லும் அதிகமாகும்.

ஃபில்டர்களைச் சுத்தம் செய்தல் : ஏசியின் ஃபில்டர்களை 2 வாரங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாகச் சுத்தம் செய்ய வேண்டும். ஏசியின் முன்பக்க பேனலை லேசாகத் தூக்கினால் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் மெஷ் ஃபில்டர்களை எளிதாக வெளியே எடுத்துவிடலாம். அதை சாதாரண குழாய் நீரில் கழுவி, நிழலில் நன்றாகக் காயவைத்து மீண்டும் மாட்டிவிடலாம். இதற்காக நீங்கள் மெக்கானிக்கை கூப்பிடத் தேவையல்லை, 0 ரூபாய் செலவில் நீங்களே செய்துவிடலாம்.

வாட்டர் ஜெட் சர்வீஸ் (Professional Wet Service): ஏசிக்கு 4 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை (அதாவது வருடத்திற்கு 2 முறை) ஒரு நல்ல டெக்னீஷியனை அழைத்து முழுமையான வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும்.முதல் சர்வீஸை கோடைக்காலம் தொடங்குவதற்கு முன், அதாவது பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் செய்ய வேண்டும்.இரண்டாவது சர்வீஸை கோடையின் கடுமையான பயன்பாடு அல்லது பருவமழை முடிந்த பிறகு, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் செய்ய வேண்டும்.

தொழில்முறை மெக்கானிக் ஒரு வாட்டர் ஜெட் பம்ப் மெஷின் மூலம் உட்புறக் குழாய்கள் மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் கம்ப்ரஸர் யூனிட்டை ஆழமாகச் சுத்தம் செய்வார். இது ஏசியில் இருக்கும் ஆழமான தூசிகளை அகற்றி, பிற்காலத்தில் கேஸ் லீக் (Gas Leakage) போன்ற பெரிய செலவு வைக்கும் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.