டெல்லி : பிரபல மெசேஜிங் செயலியான வாட்சப் அடிக்கடி புத்தம் புது அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில், புதிய கட்டண அடிப்படையிலான “Subscription” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு வழக்கமான வசதிகளைத் தாண்டி, மேலும் தனிப்பட்ட மற்றும் பிரத்யேக அனுபவத்தை வழங்கும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய திட்டம் தற்போது சில நாடுகளில் சோதனை அடிப்படையில் அறிமுகமாகி இருக்கும் நிலையில், இந்தியாவிலும் மாதம் ரூ.79 கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த Subscription திட்டத்தில் முக்கியமாக பிரத்யேக ஸ்டிக்கர்கள் (Exclusive Stickers) அனுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பயனர்களுக்கு இல்லாத புதிய அனிமேஷன் மற்றும் சிறப்பு வடிவிலான ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும். அதேபோல் வாட்சப் செயலியின் தோற்றத்தை முழுமையாக தனிப்பயனாக்கும் வகையில், செயலியின் Theme-ஐ மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான நிறம், பின்னணி வடிவமைப்பு மற்றும் தோற்ற அமைப்புகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
மேலும், ஒவ்வொரு Chat-க்கும் தனித்தனி ரிங்டோன் அமைக்கும் வசதியும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது அலுவலக தொடர்புகளுக்கு தனித்தனி அறிவிப்பு ஒலிகளை அமைத்து பயன்படுத்த முடியும். இதற்குப் பிறகும் மேலும் சில பிரத்யேக வசதிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான Chat customization, மேம்பட்ட privacy அம்சங்கள் மற்றும் cloud personalization போன்றவை அடுத்த கட்டமாக அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மெட்டா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக வாட்சப் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு முன்பு வாட்சப் பிஸ்னஸ், Channels, Sponsored features போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நேரடி Subscription முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கமான WhatsApp பயன்பாட்டிற்கு எந்த கட்டணமும் இல்லை என்றும், Subscription திட்டம் விருப்பமுள்ள பயனர்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
