குறுக்கே ஆஸிக்கு வில்லனாக வந்த மழை...டி20 தொடரை வென்ற இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

ind vs aus t20

பிரிஸ்பேன் :ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அபார சாதனை படைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சுப்மன் கில் தலைமையில், ஒரு நாள் தொடரில் 2-1 என தோல்வியடைந்த ஏமாற்றத்தை மறந்து, டி20 தொடரில் ஆதிக்கம் செலுத்தியது. கடைசி மற்றும் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் மழையால் கைவிடப்பட்டதால், இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

இது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என சமன் செய்தது. நான்காவது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-1 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் ஐந்தாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் தொடர் 2-2 என சமனாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் மழை அதற்கு இடம் தரவில்லை.பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடந்த ஐந்தாவது டி20 போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழையால் பாதிக்கப்பட்டது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் அதிரடியாக ஆடினர். 4.5 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் குவித்திருந்தது. அபிஷேக் 13 பந்துகளில் 23 ரன்களும், கில் 16 பந்துகளில் 29 ரன்களும் எடுத்திருந்தனர். அப்போது கனமழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்ததால், போட்டியை மீண்டும் தொடங்க முடியவில்லை. அம்பயர்கள் ஆலோசனைக்குப் பிறகு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். இதன்மூலம் தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் ரத்து ஆனது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டில் வென்றதால், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் டி20 தொடரை வென்றது இந்தியாவுக்கு பெரும் சாதனையாகும்.

சூர்யகுமார் யாதவின் தலைமை, அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்களின் அதிரடி, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவை இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. ஒரு நாள் தொடரில் தோல்வியடைந்த அதே அணி டி20யில் ஆதிக்கம் செலுத்தியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.