இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக்-க்கு 500 டாலர்கள் அபராதத்துடன் 2 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோதியது. இதில் இரு அணி தரப்பிலும் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில் போட்டியானது டிராவில் முடிந்தது.
பரபரப்பான ஆட்டத்திற்கு இடையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் போட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, ஸ்டிமாக்க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இகோர் ஸ்டிமாக்குக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
அந்த விஷயம் எஸ்ஏஎப்எப் ஒழுங்குமுறைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை குவைத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டிமாக்க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது எஸ்ஏஎப்எப் குழுவிற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்க்கு அடுத்த இரண்டு போட்டிகளில் தடையும், $500 (ரூ.41,000) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று எஸ்ஏஎப்எப் பொதுச் செயலாளர் அன்வருல் ஹக் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக உதவிப் பயிற்சியாளர் மகேஷ் கவ்லி நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
