இந்திய வீரர்களை முடிந்தவரை மண்டியிடச் (grovel) செய்ய விரும்பினோம்...சுக்ரி கான்ராட் பேசியதால் வெடித்த சர்ச்சை!

இந்திய வீரர்களை முடிந்தவரை மண்டியிடச் செய்ய விரும்பினோம் என தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Featured image

டெல்லி :தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்தியாவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். “இந்திய வீரர்களை களத்தில் முடிந்தவரை நிறுத்தி, அவர்களது கால்கள் தாங்காமல் தள்ளாட வைக்க விரும்பினோம். அவர்களை மண்டியிட்டு நகரச் செய்ய (grovel) விரும்பினோம்” என்று கூறினார். ‘Grovel’ என்ற இங்கிலீஷ் சொல்லுக்கு “கைகளையும் முழங்கால்களையும் தரையில் ஊன்றி தாழ்ந்து நகர்தல், அடிபணிந்து பணிவாக நடத்தல்” என்று அர்த்தம்.

அவர் பேசிய இந்த ஒரு வார்த்தைதான் இப்போது கிரிக்கெட் உலகையே கொந்தளிக்க வைத்துள்ளது.‘Grovel’ என்ற வார்த்தைக்கு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம் உள்ளது. 1976-ல் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக், வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பற்றி பேசும்போது, “அவர்கள் தாழ்ந்து போகும்போது மண்டியிடுவார்கள் (grovel). நான் அவர்களை மண்டியிடச் செய்வேன்” என்று ஆணவமாகக் கூறினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் பெரும்பாலான வீரர்கள் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வார்த்தை இனவெறித் தாக்குதலாகக் கருதப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது.

கிளைவ் லாயிட் தலைமையிலான அந்த அணி, இங்கிலாந்தை 3-0 என்று வீழ்த்தி, டோனி கிரேக்கை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வைத்தது. அந்தத் தொடர் கிரிக்கெட்டின் மிகப் பிரபலமான “பழிக்குப் பழி” தொடராக இன்றும் நினைவுகூரப்படுகிறது. சுக்ரி கான்ராட் தனது பேச்சில் “இந்த வார்த்தையை ஒருவரிடம் இருந்து கடன் வாங்கிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டதால், டோனி கிரேக்கின் பேச்சையே வேண்டுமென்றே மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

இந்திய ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், ஊடகங்கள் எனப் பலரும் இதை இனவெறி சாயம் பூசிய அவமானமாகக் கருதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இந்தியாவை மண்டியிட வைக்க விரும்பினோம்” என்று ஒரு வெள்ளை நாட்டு பயிற்சியாளர் பேசுவது, காலனியாதிக்க மனநிலையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

சுக்ரி கான்ராட் தென்னாப்பிரிக்காவில் “கலர்டு” (Coloured – கலப்பு இனம்) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிலர் “அவர் வெள்ளையர் அல்ல; இனவெறியுடன் பேசியிருக்க முடியாது” என்று வாதிடுகின்றனர். ஆனால் ‘grovel’ என்ற வார்த்தையின் பின்னணியை அறிந்தே அவர் பயன்படுத்தியிருப்பதால், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் சமூக வலைதளங்களில் #BoycottConrad, #RacistConrad போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகின. முன்னாள் வீரர்கள் சிலரும் “இது ஏற்றுக்கொள்ள முடியாத அவமரியாதை” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.தற்போது தென்னாப்பிரிக்க அணி தொடரை 2-0 என்று கைப்பற்றி நிற்கும் நிலையில், கான்ராட்டின் இந்தப் பேச்சு வெற்றியின் மகிழ்ச்சியை மறைத்து, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.