நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தொடக்கத்தில் இருந்தே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள CSK, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த போட்டியில் மீண்டும் எழுந்து வருவோம் என்று அணியின் இளம் வீரர் ஷிவம் துபே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஷிவம் துபே கூறுகையில்,“ஆமா.. நாங்க மூணு மேட்ச் தோத்துட்டோம்தான். ஆனா இதுக்கு முன்னாடி வரிசையா மூணு மேட்ச் மேல ஜெயிச்சிருக்கோம். மறந்துடாதீங்க. அத துரதிருஷ்டவசமா இப்ப தோத்துட்டோம். நாங்க மீண்டும் எழுந்திருச்சி வருவோம். அப்படியொரு டீம் ஏப்ரல் 11 அன்னைக்கு நீங்க விரைவில் எல்லாரும் பாப்பீங்க.”இந்தப் பேச்சு, தோல்வியால் சற்று அதிர்ச்சியில் இருக்கும் CSK ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து ஏப்ரல் 11-ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இணையவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் வருகை அணிக்கு பெரும் பலத்தை அளிக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே, இந்த சீசனிலும் அணியின் முக்கிய பேட்டிங் ஆயுதமாகக் கருதப்படுகிறார். மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்தாலும், அணி விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 11 அன்று நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் வெற்றியைப் பெறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.தோனி மற்றும் பிரெவிஸின் வருகையுடன் அணியின் உத்தி மற்றும் ஆட்டம் எப்படி மாறும் என்பதும், ஷிவம் துபேயின் நம்பிக்கைக்கு ஏற்ப CSK மீண்டு வருமா என்பதும் அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
