பும்ராவை வெளுத்து வாங்கிய சூரியவன்ஷி...போராடி தோற்ற மும்பை!

மழை காரணமாக 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில், ராயல்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Hero Image

கவுகாத்தி : மழை குறுக்கிட்ட ஐபிஎல் 2026-இன் 13-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 11 ஓவர்கள் கொண்ட குறைக்கப்பட்ட போட்டியாக மாறியது.

போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. ராஜஸ்தான் அணி அதிரடியாக தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூரியவன்ஷி இணைந்து பவர் ப்ளேயில் (3.2 ஓவர்கள்) 59 ரன்கள் குவித்தனர். குறிப்பாக, இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட மும்பை பந்துவீச்சாளர்களை தனது அதிரடியான ஆட்டத்தால் வெளுத்து வாங்கினார்.

பும்ரா ஓவரில் 2 சிக்ஸர்கள் அடிப்பது என்பது பெரிய விஷயம். அதனை வைபவ் சுலபமாக செய்தார் என்று சொல்லலாம். வைபவ் 39 ரன்களில் ஆட்டமிழந்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) எடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 150/3 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. மும்பை அணியின் சார்பில் அல்லா கசான்ஃபர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி பவர் ப்ளே முடிவில் 30/3 என்ற சோகமான நிலையில் இருந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் இறுக்கமான கட்டுப்பாட்டுடன் பந்து வீச, மும்பை அணி எந்த நேரத்திலும் திரும்பி வர முடியவில்லை.

ரவி பிஷ்னோய் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் விக்கெட்டுகள் மும்பை அணியின் தோல்வியை உறுதி செய்தன. இறுதி வரை போராடிய மும்பை அணி 11 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.